தேவதேவனுக்காக இளையராஜாவுடன் . . .

’நீயும் என்கூடவே ஃப்ளைட்ல வந்துரு’ என்றார் இளையராஜா. ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தை’ நான்தான் நடத்துகிறேன் என்பது போலவே அவரது பேச்சு இருந்தது. அதில் ஆச்சரியமில்லை. ஒவ்வொரு முறை அவரை சந்திக்க ஜெயமோகன் செல்லும்போதும் நான்தான் அழைத்துச் சென்றிருக்கிறேன். ஆகையால் அவர் அப்படி நினைத்திருக்கலாம். முதலில் ஜெயமோகன் அவரைச் சந்தித்து தேவதேவனுக்கான விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று கேட்டபோது மறுப்பேதும் சொல்லாமல் ஒத்துக் கொண்டார். சட்டென்று அவர் ஒத்துக் கொண்டதற்கு ஜெயமோகன் கேட்டுக் கொண்டவிதம்தான் காரணம். ‘தேவதேவனை மாதிரி எத்தனையோ படைப்பாளிகள பரவலா யாரும் கண்டுக்கல. ஒங்கள மாதிரி பெரிய ஆளுமைகள் வந்து அவர கௌரவிச்சா, ஒரு கவனம் வரும். குறைந்தபட்சம் அவரோட குடும்பத்தச் சேந்தவங்களுக்காவது, ‘இத்தன வருஷமா இவரு ஏதோ பண்ணிக்கிட்டிருந்திருக்காருன்னு’ தெரிய வரும்’. ஜெயமோகன் சொன்னது, இளையராஜாவின் மனதில் சட்டென்று போய்ச் சேர்ந்தது. உடனே சொன்னார். ‘இந்த மாதிரி அசலான இலக்கியவாதிகளையெல்லாம் கௌரவிக்கணும்னு எனக்கும் ஆசைதான். ஆனா சமகாலத்துல இயங்கிக்கிட்டிருக்கிற இலக்கியவாதிங்களப் பத்தி எனக்கு தெரியாது. ஒங்கள மாதிரி யாராவது சொன்னாத்தான் தெரியும்’ என்றார். விழாவில் கலந்து கொள்ள நன்றி சொல்லிவிட்டு ஜெயமோகன் நாகர்கோயிலுக்குக் கிளம்பிச் சென்று விட்டார். ஆனால் அதற்குப் பிறகுதான் சிக்கல் ஆரம்பமானது. ஒத்துக் கொண்ட தேதியில் இளையராஜாவால் கோவைக்கு வர முடியாத சூழல் ஏற்பட்டது. ‘நாளைக்கு சொல்லிடறேனே’ என்று நான்கைந்து முறை சொன்னார். இதற்குள் ‘விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்திலிருந்து’ எனக்கு ஃபோனுக்கு மேலே ஃபோன். இன்விட்டேஷன் அடிக்கணும். கொஞ்சம் சீக்கிரமா கேட்டு சொன்னீங்கன்னா…



பொதுவாகவே இளையராஜா அவர்களை அடிக்கடி சென்று பார்க்கும் வழக்கமுடையவனல்ல நான். எப்போதாவது செல்வேன். ‘என்னய்யா, ஒன்ன ஆளையே காணோம்?’ ஒவ்வொரு முறையும் அவரது வரவேற்பு இப்படித்தான் இருக்கும். ஆனால் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்துக்காக பிரசாத் ஒலிப்பதிவுக் கூடத்தை வட்டமிட்டபடியே இருந்தேன். நண்பர் கே.பி.வினோத்திடமிருந்து ‘குட்மார்னிங், குட் லெவன் ஓ’கிளாக், குட் ட்வெல்வ் ஓ’ க்ளாக்’ ஃபோன்கள் வந்தவன்ணம் இருந்தன. ஜெயமோகனால் அறிமுகமான வினோத் எனக்கு மிக நெருக்கமான நண்பரானவர். அதனால்தான் கிட்டத்தட்ட இரண்டாண்டுகளுக்குப் பிறகு, இளையராஜாவுக்காக எனக்கு ஒருநாளைக்கு ஆறு முறை ஃபோன் பண்ணினார். ஒருமாதிரியாக இளையராஜா 22ஆம் தேதி போயிரலாம் என்றார். கூடவே, ‘நீயும், நானும் ஒண்ணாத்தானே போறோம்?’ என்றும் கேட்டுக் கொண்டார். வெளியே வந்து வினோத்துக்கு ஃபோன் பண்ணிச் சொல்லி, இன்விட்டேஷன் அடிச்சுக்கோங்க என்று உறுதியாகச் சொல்ல முடிந்தது.

22ஆம் தேதி சென்னை விமான நிலையத்தில் இளையராஜா அவர்களுடன் அமர்ந்து காப்பி குடித்துக் கொண்டிருக்கும்போது, கோவையிலிருந்து அரங்கசாமி அழைத்து, ‘அண்ணா’ என்றார். ‘ஏர்போர்ர்ட்ல இருக்கோம், அரங்கசாமி’ என்றேன். ஃபிளைட் ஏறும் வழியில் அவசர அவசரமாக ஒருவர் ஓடி வந்து இளையராஜாவிடம், ‘ஸார், நீங்க கங்கை அமரன்தானே?’ என்று கேட்டார். இளையராஜாவும் சிரித்தபடியே ‘ஆமாங்க’ என்றார். விமானத்தில் உட்கார்ந்திருக்கும்போது ‘ஏன் ஸார் அந்தாளு கேட்டதுக்கு ஆமான்னு சொன்னீங்க’ என்று கேட்டேன். “நீங்க இளையராஜாவா, கங்கை அமரனான்னு கேட்டிருந்தாருன்னா ‘இல்லீங்க. நான் இளையராஜா’ன்னு சொல்லியிருக்கலாம். அவர் ஸ்ட்ரெய்ட்டா கங்கை அமரன் தானேன்னு கன்ஃபர்ம் பண்ணிக்கிட கேக்குறாரு. சரி, அவர் ஆசையக் கெடுப்பானேன்னு ஆமான்னு சொல்லிட்டேன்.” சொல்லிவிட்டு சிரித்தார். “இது பரவாயில்ல. மதுரை ஏர்போர்ட்டுல போயி எறங்குவேன். அவசர அவசரமா ஓடிவந்து, ‘ஸார், மதுரைக்கு வந்திருக்கீங்களா’ன்னு கேப்பாங்க.” மேலும் சிரித்தார். பிரபலமானவர்களை எதிர்பாராவிதமாக சட்டென்று பார்க்கும் மனிதர்கள், பிரமிப்பு நீங்காமல் ஏதாவது பேசியே ஆக வேண்டும் என்று இப்படி பேசுவதை பலமுறை பார்த்திருக்கிறேன். ஒருசிலர் இப்படி ஏதாவது கேட்டுவிட்டு நாக்கைக் கடித்துக் கொள்வார்கள். வெகுசிலர் விடாப்பிடியாகக் கேட்டுக் கொண்டே இருப்பார்கள். “ஸார், மதுரைக்கு வந்திருக்கீங்களா?”

ஜெயமோகன் சொல்லி வினோத் என் கையில் கொடுத்திருந்த, தேவதேவனைப் பற்றிய குறிப்புகளும், ஒருசில கவிதைகளும் அடங்கிய தாள்களைக் கொடுத்தேன். விமானத்திலேயே படித்தார். அவருக்குப் பிடித்திருந்தது. பிறகு ஏதேதோ பேசிக் கொண்டே போனதில் நேரம் போனதே தெரியவில்லை. வயிற்றில் புளி கரைந்து, காதுகளில் ஒருமாதிரியான பாதாள ஒலி கேட்டபிறகுதான் கோவை வந்துவிட்டதை உணர முடிந்தது. கோவை விமானநிலையத்தில் நாஞ்சில் நாடன் சித்தப்பா தலைமையில் அரங்கசாமியுடன் ஜெயமோகன் கையசைத்தார். பார்க் பிளாஸா என்ற ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றார்கள். விமான நிலையத்திலேயே ஜெயமோகன் என் காதைக் கடித்தார். ‘பெரியவரை ரூம்ல விட்டுட்டு வந்திருங்க. ஒங்களுக்காக ஒரு பெரும் கூட்டமே காத்துக்கிட்டிருக்கு’. பார்க் பிளாஸாவுக்குப் போய், இளையராஜாவுக்கான ஸ்யூட்டில் (suite- சரிதானே பாட்டையா?) அவரை விட்டுவிட்டு, ‘ஸார், அப்ப சாயங்காலம் வந்து ஃபங்க்‌ஷனுக்குக் கெளம்பும் போது வரேன். ரெஸ்ட் எடுங்க’ என்றேன். ‘ரெஸ்ட் எடுக்கவா? நாம என்ன மலையேறியா வந்திருக்கோம்? அட போய்யா. என் கூட இரு. தனியா இருக்கேன்’ என்றார். அதே தளத்தில் எனக்கொரு அறையை ஏற்பாடு செய்தார்.

அதற்குள் பத்திரிகையுலகம், காவல்துறை, கோவையின் முக்கியஸ்தர்கள் என வரிசையாக இளையராஜாவை சந்திக்கும் பொருட்டு என்னைத் தொடர்பு கொள்ளத் துவங்கினர். மாலையில் நிகழ்ச்சிக்குக் கிளம்பினோம். விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தைச் சேர்ந்த ரவிச்சந்திரன் வந்திருந்தார். கார் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்குள் நுழையும்போதே, பெரும் கூட்டம் வாசலில் காத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது. இளையராஜாவால் கீழே இறங்கவே முடியவில்லை. மொய்த்துக் கொண்டார்கள். ஒரே சத்தம். ஒரு சில அழுகையொலிகளும் கேட்டன. ஒருசில நொடிகளிலேயே கூட்டத்துக்குள் நான் தொலைந்துப் போக இருந்தேன். நல்ல வேளையாக முகம் தெரியாத அரங்கசாமியின் நண்பர்கள் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர். ஒருமாதிரியாக முழிபிதுங்கி, ஓர் அறைக்குள் நுழைந்து மூச்சு விட யத்தனித்த போதுதான் தெரிந்தது, அது மேடை என்று. சிறப்பு அழைப்பாளர்களில் நானும் ஒருவன் என்பதால், மூச்சை முழுங்கிக் கொண்டு உட்கார்ந்தேன். இரண்டு சிறுமிகள் ஸ்ருதிசுத்தமாக ‘மாசறு பொன்னே வருக’ பாடினார்கள்.



பார்வையாளர்களின் முதல் வரிசையில் சகோதரர் மரபின் மைந்தன் முத்தையா, ஓவியர் ஜீவானந்தன் என்று தெரிந்த முகங்கள். கூடவே பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் அவர்களும் அமர்ந்திருந்தார். சாத்தான்குளத்து செல்வேந்திரன் நிகழ்ச்சியைத் தொகுக்க, அரங்கசாமி வரவேற்புரை நிகழ்த்தும்போதுதான் தேவதேவன் அண்ணாச்சியைப் பார்க்கவேயில்லையே என்று மண்டையில் உறைத்தது. உட்கார்ந்திருந்த இடத்திலிருந்தே, இளையராஜா அவர்களின் அருகில் அமர்ந்திருந்த தேவதேவன் அண்ணாச்சியை நைசாக எட்டிப் பார்த்தேன். அவரும் அங்கிருந்து ரகசியமாக என்னை எட்டிப் பார்த்தார். இருவருமே சட்டென்று பார்வையைத் தாழ்த்திக் கொண்டோம்.




நாஞ்சில் நாடன் சித்தப்பா தன் தலைமையுரையைத் துவக்கினார். அவரது பேச்சை பலமுறை கேட்டிருக்கிறேன். பெரும்பாலும் இயல்பான மொழியிலேயே அவரது உரை அமைந்திருக்கும். இந்தமுறை அவர் இளையராஜாவைப் பற்றியே அதிகம் பேசினார். தேவதேவனின் குறிப்பிட்ட கவிதைகள் சிலவற்றைப் பற்றிச் சொல்லி முடித்துக் கொண்டார். அடுத்து மோகனரங்கன் தனது உரையை எழுதி வந்து வாசிக்கத் துவங்கினார். ரொம்பவே அர்த்தபுஷ்டியான உரை என்பதால் எனக்கு ஒன்றுமே புரியவில்லை. அடுத்து பேசிய ராஜகோபாலின் உரை, மோகனரங்கனின் உரையை விட தடிமனானது. நிறைய தாள்கள் கொண்டு வந்திருந்தார். ஆனால் அவற்றைப் பார்க்காமலேயே பேசினார். அதிலும் எனக்கு ஒன்றும் புரியவில்லை. புரியவில்லை என்பதைவிட தெரியவில்லை என்று சொல்வது பொருத்தமாக இருக்கும். இத்தனைக்கும் நான் படித்து ரசித்த தேவதேவன் கவிதைகள்தான். ஆனால் இவர்கள் சொல்லிக் கேட்க புத்தம் புதுசாக எழுதப்பட்ட வேறொரு கவிதை மாதிரி இருந்தது. ஒருமாதிரி திகிலுடன் உட்கார்ந்திருக்கும்போது, என்னருகில் அமர்ந்திருந்த கேரளக் கவிஞர் கல்பற்றா நாராயணன் தொண்டையைக் கனைத்தபடி, என் காதருகே குனிந்து என்னமோ கேட்க வந்தார். ராஜகோபாலின் பேச்சிலிருந்து ஏதேனும் கேள்வி கேட்பாரோ என்று பயந்தபடியே காதைக் கொடுத்தேன்



‘மூத்திரம் கழிச்சுட்டு வந்துரட்டுமா, சுகா?’ என்று வகுப்பாசிரியரிடம் மாணவன் கேட்பது போல் கேட்ட பிறகுதான் எனக்கு நிம்மதி வந்தது. ‘கவலப்படாம போயிட்டு வாங்க, ஸார். ஒங்க எடத்த நான் பாத்துக்கிடறேன். அதுக்குள்ள ராஜகோபால் முடிச்சிடுவாரு’ என்று சொல்ல நினைத்து, தவிர்த்துக் கொண்டு ‘போயிட்டு வாங்க ஸார்’ என்று மட்டும் சொன்னேன். ஆனால் அவர் வருவதற்குள் வேறு யாராவது வந்து அவர் இடத்தில் உட்கார்ந்து, ‘ஒங்கிட்டதானலெ சொல்லிட்டு போனேன்’ என்று கவிஞர் வந்து மலையாளத்தில் ஏசுவாரோ என்கிற பயம், அவர் வந்து அமரும் வரை இருந்தது.

அடுத்து கல்பற்றா நாராயணன் பேசுவார் என்று அறிவித்தார்கள். கூடவே அவரது மலையாள உரையை மொழிபெயர்க்க கே.பி.வினோத் கையில் ஒரு மைக் கொடுக்கப்பட்டது. சுவாரஸ்யமாகப் பேசினார் கவிஞர். ஒரு இலக்கிய நிகழ்ச்சியில் கல்பற்றா நாராயணனைப் போன்றவர்களை அழைத்தால் நிச்சயம் இலக்கிய விழா கலகலப்பாக மாறும். ஆனால் கவிஞரின் மலையாள உரையை தமிழில் மொழிபெயர்க்க வினோத் எடுத்த முயற்சிகளில்தான் அவருக்கு கதகளியாட்டம் தெரியும் என்கிற விஷயம் தெரிய வந்தது. இத்தனை நாட்களில் அவர் என்னிடத்தில் மறைத்து விட்ட ரகசியம் அது. அதுவும் கையைக் கட்டிக் கொண்டே கதகளி ஆட முடியும் என்பதை என்னைப் போன்ற பாமரனுக்கு வினோத் உணர்த்தினார். மற்றபடி பார்வையாளர்களுக்கு, கல்பற்றா நாராயணின் மலையாள உரை, மொழியைப் பெயர்க்காமலேயே சரியாகப் போய்ச் சேர்ந்தது.




எல்லோரும் கவிஞரின் பேச்சை ரசித்துக் கொண்டிருக்க, நான் மட்டும் கலக்கத்தில் அமர்ந்திருந்தேன். காரணம், செல்வேந்திரன் என் காதில் முணுமுணுத்துச் சொன்ன ஒரு விஷயம். ‘அண்ணே, ஒங்கள கடசியாத்தான் பேச விடப் போறோம்.’




என் பெயரை அறிவித்தவுடன் கைதட்டினார்கள். யாரோ ஒருவர் எழுந்து நின்று கைதட்டி என்னைக் கலவரப்படுத்தினார். ‘முதலில் கோவை மாநகரமக்களுக்கு என் வணக்கங்கள்’ என்கிற முதல் வரியை மட்டும் என் குரலில் நான் கேட்டேன். பிறகு ஏதேதோ பேசி விட்டு உட்கார்ந்த பின்னும் கால் ஆடிக்கொண்டுதானிருந்தது.




இதற்குள், வெளியே இளையராஜாவைப் பார்க்க வேண்டும் என்பதற்காக பெரும் ஜனத்திரள் திரண்டு நிற்கிறது என்றும், ஜாக்கிரதையாக அவரை அழைத்துச் செல்லவேண்டும் என்றும் அரங்கசாமி சொன்னார். ‘கடைசி வரைக்கும் அவர் இருக்கணும்னு இல்லண்ணா. எப்படியாவது வெளியே கூட்டிட்டு போயிருங்க’ என்றார். இளையராஜா அவர்களிடம் போய் மெதுவாகச் சொன்னேன். ‘தேவதேவனோட ஏற்புரையைக் கேக்காம நாம போறது முறையில்லையே?’ என்றார். ‘ஸார், வெளியே கூட்டத்தை கண்ட்ரோல் பண்ண முடியாம திணறுராங்க. தேவதேவன்கிட்டே நான் சொல்லிக்கறேன்’ என்று சொல்லிவிட்டு, தேவதேவன் அண்ணாச்சியின் காதைக் கடித்தேன். ‘ஒண்ணும் பிரச்சனையில்ல. மொதல்ல கெளம்புங்க’ என்றார். ஆனால் நினைத்த படி வெளியே வர முடியவில்லை. புகைப்படக் கலைஞர்களும், பொதுஜனங்களுமாக நிறைந்து நின்றனர். அவர்களைத் தாண்டி காரில் ஏறுவது சாத்தியம் என்றே தோன்றவில்லை. ஒவ்வொருவராகப் பார்த்து, புகைப்படம் எடுத்து, பிறகு போகலாம் என்றால் அதற்கும் இடமிருப்பதாகத் தெரியவில்லை. ஒரு மாதிரியான பரவச மனநிலையில் அனைவருமே இருந்தனர். தடால் தடாலெனக் காலில் விழுந்தனர். ஒருசிலர் கண்ணீர் விட்டுக் கதறி அழுதனர். ஒருவரை ஒருவர் தள்ளிக் கொண்டு இளையராஜாவின் மேல் கிட்டத்தட்டப் பாய்வதற்கு முற்பட்டனர்.

மீண்டும் மேடைக்கே திரும்பினோம். நான் மட்டும் அவரது பையை எடுத்துக் கொண்டு மேடையை விட்டு இறங்கி, பின்பக்கமாக எப்படி போகலாம் என்று பார்க்கப் போனேன். என்னைச் சூழ்ந்து கொண்டனர். ‘டேய், இவரில்லாம அவரு போக மாட்டாருடா. விடாதீங்கடா’ என்று பாய்ந்தனர். கிட்டத்தட்ட அவர்களிடத்தில் பணயக் கைதியாக மாட்டிக் கொண்டேன். அவர்களில் ஒருசிலருக்கு என்னைத் தெரிந்திருந்தது. ஒரு நண்பர் என் கைகளைப் பற்றி அழுத்தமாகக் குலுக்கி, ‘விகடன்ல நீங்க எளுதுன முந்தான முடிச்சுக்கு நான் அடிமை’ என்று பலாப்பழ வாசனையுடன் குளறலாகச் சொன்னார். மேலும் ரகசியமாக ஏதோ சொல்லும் தோரணையில் என் காதருகே ‘உ’ என்று உதட்டைக் குவித்தபடி நெருங்கினார். நெற்றியில் உள்ள திருநீற்றைப் பார்த்து, ‘உலகம் சிவமயம்’ என்று சொல்ல வருகிறார் என்று நினைத்து, காதை நீட்டவும், எதிர்பாராவிதமாகக் கன்னத்தை எச்சிலாக்கினார். இந்த அதிர்ச்சியிலிருந்து நான் மீள்வதற்குள், இன்னொரு நண்பர் வந்து, ‘இலக்கிய கூட்டத்துலயே சினிமாக்காரர்களை, அரசியல்வாதிகளை விமர்சிக்க இலக்கியவாதிகளுக்கு அருகதை இல்லைன்னு தைரியமா சொல்லிட்டீங்க, ஸார். சூப்பர்’ என்று மேலும் அதிர்ச்சிக்குள்ளக்கினார். ‘அய்யய்யோ, அது ஏதோ கூட்டத்தல்லாம் பாத்ததுல டங்குஸ்லிப்பா சொன்னது. மன்னிச்சுக்குங்க’ என்று பதறினேன். ‘அட, நான் ஒண்ணும் இலக்கியவாதில்லாம் இல்ல, ஸார். வெறும் கவிஞர்தான். ரெண்டு புஸ்தகம் போட்டிருக்கென். சினிமால சான்ஸு குடுத்தீங்கன்னா முத்துக்குமாரையெல்லாம் உக்கார வச்சுரலாம். கொஞ்சம் இருங்க’ என்று கைப்பையில் என்னவோ தேடினார். இதற்குள் தூரத்தில் இருந்து ஒருவர் கத்தினார். ‘இளையராஜா என்ன ஒங்க வீட்டு சொத்தாடா? அவரு மக்கள் சொத்துடா. தமிழனின் சொத்து. எங்கள் சொத்து’ என்று அடுக்கிக் கொண்டே போய், கடைசியில் என் சகோதரியை ஏசி முத்தாய்ப்பாய் முடித்துக் கொண்டார்.

ஒருவழியாக அரங்கசாமியின் ஆட்கள் வந்து என்னை மீட்டனர். ஃபோன் வந்தது. இளையராஜா ஸார் பேசினார். ‘நான் வேற கார்ல போயிக்கிட்டிருக்கென். நீ சீக்கிரம் வந்திரு’ என்றார். ‘என்னால ஒடனெ வந்துட முடியுமான்னு தெரியல ஸார்’ என்றேன். ‘யோவ், நீ வந்துதான்யா ஆகணும். ரூம் கீயும், பையும் ஒங்கிட்டதான் இருக்கு. மறந்துட்டியா?’ என்றார். அரங்கசாமியின் தோழர்கள் ஒரு காரில் என்னை அடைத்து, பறந்தனர். காரை ஓட்டியவர் சொன்னார். ‘அண்ணா, நீங்க கமல் ஸார் பேரச் சொன்னதுக்கு ரொம்ப நன்றிங்கண்ணா. நாங்கல்லாம் ஒலகநாயகனோட தீவிர ரசிகர்கள்’. எனக்கு அதிர்ச்சி மேல் அதிர்ச்சியாக இருந்தது. ‘கமல் பேரைச் சொன்னேனா?’ காட்டிக் கொள்ளாமல், ‘அவரு பேரச் சொல்லாம இருக்க முடியுமா, பிரதர்?’ என்றேன். காரின் வேகம் அதிகரித்தது. கமலஹாசன் பெயரை எப்போது சொன்னோம் என்று யோசிப்பதற்குள், இளையராஜாவுக்கு முன்னதாகவே கொண்டு போய் ஹோட்டலில் இறக்கி விட்டனர்.

இரவு உணவு முடிந்து, தூங்கும் வரை அவருடன் இருந்து விட்டு, என் அறைக்கு வந்தேன். இரவு 11 மணிக்கு சகோதரர் மரபின் மைந்தன் முத்தையாவுடன், பேராசிரியர் கு.ஞானசம்பந்தன் வந்தார். ஏற்கனவே ஃபோன் மூலம் அவர்கள் வருவதைத் தெரிவித்திருந்தனர். நள்ளிரவு 2 மணிவரைக்கும் உரையாடல் நீடித்தது. சிரித்து சிரித்து இருமல் வந்தது. கிளம்பும் போது, அந்த நள்ளிரவு நேரத்திலும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். எனது கைபேசியில் புகைப்படம் எடுக்க முயன்ற மரபின் மைந்தன், அதற்குப் பிறகு எந்த சூழலிலும் என் கைபேசியிலுள்ள கேமராவை பயன்படுத்த முடியாமல் ஆக்கினார். ‘புலவங்க சகவாசம் வேண்டான்னு இதுக்குத்தான் சொல்லுவாங்க’ என்று நான் மனதுக்குள் சொன்னது, பேராசிரியருக்குக் கேட்டு விட்டது. சிரித்தபடியே கிளம்பிப் போனார்.

மறுநாள் மாலை இளையராஜா அவர்களின் கச்சேரி இருந்தது. அதற்கும் நான் அவருடன் இருக்க வேண்டும் என்று கண்டிப்பாகச் சொல்லிவிட்டார். காலையில் என் அறையில் குளித்து முடித்து கிளம்பிக் கொண்டிருக்கும் போதே, ஃபோன் பண்ணி அழைத்து, ‘சாப்பிடலாமா? உனக்காகத்தான் வெயிட் பண்றேன்’ என்றார். அவசர அவசரமாக வெளியே ஓடி வந்தேன். என் அறைக்கு வெளியே கும்பலாக நின்று கொண்டிருந்தனர். ‘ஸார், திருப்பூர்ல இருந்து வர்றோம், ஸார். நேத்து ராத்திரிலேருந்தே ஐயாவப் பாக்கணும்னுதான் காத்துக்கிட்டிருக்கோம்’. அவர்களை அழைத்துச் சென்று புகைப்படம் எடுக்க வைத்து அனுப்பி வைத்தேன். அவர் காலில் விழுந்தவர்களில் ஒருவர், வெளியே வந்து என் கால்களைத் தொட முயன்றார். பதறிப் போய்த் தடுத்தேன். ‘என் வாழ்க்கையில நீங்க எவ்ளோ பெரிய உதவி செஞ்சிருக்கீங்கன்னு ஒங்களுக்கு தெரியாதுங்கண்ணா’. கண் கலங்கச் சொல்லிவிட்டு, என் கைகளைப் பிடித்து தன் கண்களில் ஒற்றிக் கொண்டார். அடுத்தடுத்து பலர். மதிய உணவுக்குப் பிறகு, என்னறைக்குத் திரும்பும் போது ஓர் இளைஞர் கூட்டம் என்னை மறித்தது. ‘ஐயாவ பாக்கணும், ஸார்’. ‘இல்லீங்க. இப்பதான் அவரு கொஞ்சம் ஃப்ரீ ஆனாரு. சாயங்காலம் பாக்கலாமே’. அவர்கள் கேட்கத் தயாராக இல்லை. ‘அவர பாக்காம போக மாட்டோம்’ என்றார்கள். எனக்கு இருக்கும் சங்கடம் என்னவென்றால், அவரது அறைக்கு ஒவ்வொரு முறை சென்று கதவைத் தட்டும் போதும், உள்ளறையிலிருந்து அவரே வந்துக் கதவைத் திறக்க வேண்டும். அப்படி அவரை அடிக்கடி சிரமப்படுத்துவதைத் தவிர்க்க எண்ணினேன். ‘இப்ப அவர தொந்தரவு பண்ண முடியாதுங்க. சாயங்காலம் நிகழ்ச்சி நடத்துற இடத்துக்கு வாங்க’ என்று சொல்லிவிட்டு திரும்பிப் பார்க்காமல் நடக்கத் துவங்கினேன். என்னைத் தாண்டி வேகமாகச் சென்ற ஓர் இளைஞர், முன்னாலிருந்த கண்ணாடிச் சுவரைக் காட்டி, ‘நீங்க மட்டும் இப்ப ஐயாவப் பாக்க விடலேன்னா இங்கேருந்து கீழே குதிச்சிருவேண்ணா’ என்று சொன்னபடி, இரண்டாவது மாடியிலுள்ள ஜன்னல் கண்ணாடியை நோக்கி, ஓட்டப் பந்தயவீரன் போலக் கால்களைத் தரையில் தேய்த்து, மூச்சை இழுத்தவாறே தயாரானார்.. ‘எப்பா, ஏஎய்ய்ய்’ அடிவயிறு கலங்க அந்தப் பையனின் கைகளை எட்டிப் பிடித்தேன். மீண்டும் இளையராஜாவின் அறையைத் தட்டி, ‘ஸார், கொலைக் கேஸுல உள்ள தள்ளிருவாங்க போல. ஃபேன்ஸ் வந்திருக்காங்க’ என்று சொல்லி அழைத்துச் சென்றேன். கண்களைத் துடைத்தபடி மனநிறைவோடு திரும்பினர் இளைஞர்கள்.

சென்னைக்குத் திரும்பும்போது, விமானத்தில் இளையராஜா அவர்கள் சொல்லிக்கொண்டே இருந்தார். ‘தேவதேவனுக்கு விருது கொடுக்கப் போயிட்டு, அவரோட ஏற்புரையக் கேக்கல. தப்பா நெனச்சிருக்க மாட்டாரே?’. ’அதான் மேடைலயே அவர்கிட்டெ சொல்லிட்டுதானே ஸார் கெளம்பினோம்?’ சமாதானம் சொன்னேன். ஆனால் நாங்கள் வந்த பிறகு தேவதேவன் அண்ணாச்சி தன்னுடைய ஏற்புரையில், எழுதி வைத்து கொண்டு வந்த முப்பது பக்கங்களுக்குக் குறையாத உரையின் மூலம் கண்ணீர்ப் புகை குண்டை, கூட்டத்தை நோக்கி வீசிவிட்டார் என்று கேள்விப்பட்டேன். சென்னை விமான நிலையத்தில் வந்து இறங்கினோம். காரை நோக்கி விரைந்து நடந்து கொண்டிருக்கும் போது, எதிரே வந்த ஒருவர் கண்ணுக்கு முன்னால் எதிர்பாராதவிதமாக இளையராஜாவைப் பார்த்தவுடன், ஒருகணம் திகைத்து, பின் ‘ஃபிளைட்ல வந்தீங்களா, ஸார்?’ என்று கேட்டார்.

Labels: